இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அயவந்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வர் ஸ்வாமி
இறைவி :ஶ்ரீ மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி அம்பாள்
தல மரம் :மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
Arulmigu Ayavantheeswarar / Bhramapureeswarar Swamy Temple, Thirusaatha Mangai - Nanilam, | அருள்மிகு மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி அம்பாள் சமேத அருள்மிகு அயவந்தீஸ்வரர்/ பிரம்மபுரீஸ்வர் சுவாமி திருக்கோயில்- திருசாத்தமங்கை -நன்னிலம் தல வரலாறு
ஊருக்கு "சாத்தமங்கை" என்றும், கோயிலுக்கு "அயவந்தி" என்றும் பெயர் தற்போது சீயாத்தமங்கை என வழங்கப்படுகிறது. இறைவன் அயவந்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வர், இறைவி மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி, 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் திருசாத்தமங்கை. சிவத்தொண்டாற்றிய திருநீலநக்க நாயனார், அவரது மனைவியின் உருவச்சிலைகள் மகா மண்டபத்தில் உள்ளன. திருநீலநக்கர் தன் மனைவி மங்கையர்க்கரசியுடன் அனுதினமும் அயவந்தீஸ்வரரை தல மரமான கொன்றையின் மலர்களால் வழிபடுவது வழக்கம். திருநீலநக்கர் ஒருமுறை மனைவியோடு திருக்கோயிலுக்குச் சென்றிருந்தார். கருவறையில் லிங்கத் திருமேனி மீது ஒரு சிலந்திப் பூச்சியைக் கண்ட அவரது மனைவி, அதனைத் தன் வாயினால் ஊதி அகற்றிட, மனைவியின் எச்சில் இறைவன் திருமேனியில் பட்டுவிட்டதாகக் கருதிய நீலநக்கர் சினங்கொண்டு . மனைவியைப் பிரிந்து வாழத் துவங்கினார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது கனவில் இறைவன் தோன்றி, நாயனாரின் மனைவி வாயினால் ஊதிய பகுதி தவிர இதர பகுதிகள் முழுதும் லிங்கத் திருமேனியில் கொப்புளமாகக் காட்சியளிப்பதைச் சுட்டிக்காட்டி, அம்மங்கையின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தினார். இருவருக்கும் தம்பதி சமேதராக காட்சியளித்தார். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் திருப்பணி செய்த தலங்களில் ஒன்று.
உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய இவ்வாலயம் சுவாமி அம்பாள் சந்நிதிகள் இரண்டிற்கும் தனித்தனி வாயில்களுடனும், தனி கோபுரங்களுடனும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோவிலுக்கு வெளியே கோபுர வாயில் எதிரே ஆலயத்தின் திர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தில் ஒரு பகுதி சந்திர தீர்த்தம் என்றும், மற்றொரு பகுதி சூரிய தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. தீர்த்தக் குளத்தின் கரையில் சித்திவிநாயகர் கோயில் உள்ளது. சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றம் உள்ளது. சுற்றில் வலம் வரும்போது சந்திரன், சனிபகவான், சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விசுவநாதர், விசாலாட்சி, விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்திலுள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தின் அடியில் விநாயகர், லிங்கத் திருமேனிகள் உள்ளன. உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து வலம் வரும்போது, வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. மூலவர் கருவறையில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். சுயம்பு மூர்த்தியான இந்த அயவந்தீசுவரர் பாணம் முழுவதும் கொப்புளம் போல காட்சி தருவது, நீலநக்க நாயனார் வரலாற்றை நினைவுபடுத்துவாக அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களில் தட்சிணாமூர்த்தி அழகுடன் உள்ளார். . கருவறை சுற்றுச் சுவர் வெளிப்புறத்தில் நர்த்தனகணபதி, அகத்தியர் ஆகிய இவர்கள் இருவருக்கும் இடையே கங்கா விஸர்ஜனர் உள்ளார். வெளி மண்டபத் தூண் ஒன்றிலுள்ள ஆஞ்சனேயர் வாலில் மணியுடன் காணப்படுகிறார். அருகிலுள்ள மற்றொரு தூண் அருகே உள்ள தவழும் கிருஷ்ணனின் திருமேனியும் காணத்தக்கது. அம்பிகை சன்னதி தனிக்கோயிலாகவுள்ளது. சூரியன் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதி உள்ளன. நந்தி சற்று உயரத்தில் உள்ளது. படிகளேறிச் சென்றால் கருவறை வாயிலில் மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகரையும், தண்டபாணியையும் துவாரமூர்த்திகளாகத் தரிசிக்கலாம். நேரே அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல நெற்றிக்கண் இருப்பது சிறப்பு
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ அயவந்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வர் திருக்கோயில் திருசாத்தமங்கை நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
ஆலயம் அமைவிடம்:
திருவாரூர் மாவட்ட, நன்னிலம் வட்டம், திருசாத்தமங்கை சிவன்கோயில் நாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் ௧௩ 13கி.மி. தொலைவிலும், திருவாரூர் சன்னாநல்லூர் வந்து திட்டசேரி சாலையில் சென்றால் ௧௪ 14 கிமி தூரத்தில் திருசாத்தமங்கை உள்ளது.